Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 ஜனவரி (ஹி.ச.)
வருடம்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை ஆகும்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை முதல் நாளான நேற்று
(ஜனவரி 15), அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், இன்று
(ஜனவரி 16) காலை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.
இப்போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பமானது.
போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை தொடர்ந்து முதல் சுற்று தொடங்கியது. முதல் சுற்றில் 100 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களின் விவரத்தை அறிய களத்தில் டிஜிட்டல் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சுற்றுகளாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வெவ்வேறு வண்ணத்திலான சீருடை (ஜெர்சி) அணிந்து பங்கேற்கின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே போட்டியில் பங்கேற்க காளைகளும், வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
இந்தப் போட்டியை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் பலர் பாலமேட்டில் முகாமிட்டுள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. களத்தில் காயமடையும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b