Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரேபீஸ் தடுப்பூசிகள் ஏஆர்வி மற்றும் ரேபீஸ் இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கு தமிழக சுகாதாரத்துறை ரூ.120 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரேபீஸ் பாதிப்பு என்பது பொது சுகாதார பிரச்னையாக இருந்து வருகிறது. உலக அளவில் ரேபீஸ் இறப்புகளில் சுமார் 36 சதவீதம் பாதிப்பு இந்தியாவில் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 7 லட்சம் நாய்க்கடி பாதிப்புகள் பதிவாகி உள்ளன. நாய்கடி பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகிறது.
நாய் கடித்தவுடன் முதல்தவணை தடுப்பூசி போடுகின்றனர். ஆனால், முதல்தவணை தடுப்பூசிக்கு பிறகு, மற்ற 3 தவணை தடுப்பூசிகளை முறையாக செலுத்திக்கொள்வதில்லை. இதனால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் ரேபீஸ் பாதிப்பால் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது.
ரேபீஸ் பாதிப்பை தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும். நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தில் நன்றாக தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு கழுவ வேண்டும். மேலும், கடிபட்ட இடத்தில் மஞ்சள், சுண்ணாம்பு, காபி உள்ளிட்டவைகளை தடவக்கூடாது.
நாய் கடித்தவுடன் 4 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் ஆகும்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரேபீஸ் தடுப்பூசிகள் ஏஆர்வி மற்றும் ரேபீஸ் இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கு தமிழக சுகாதாரத்துறை ரூ.120 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.
கடந்த 2015-16ம் ஆண்டு ஏஆர்வி தடுப்பூசி கொள்முதல் 3.87 லட்சம் டோஸ்களில் இருந்து 2024-25ம் ஆண்டு 9.36 லட்சத்திற்கு அதிகமாக டோஸ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ரேபீஸ் பாதிப்பால் 255 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் வீட்டு செல்லப்பிராணிகள் மூலம் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஏஆர்வி தடுப்பூசியை நாய் கடித்த அன்றைய தினமே முதல் ஊசியை போட வேண்டும்.
அதன் பின்பு, 2வது தவணை தடுப்பூசியை நாய் கடித்த 3வது நாளும், 3வது தவணை தடுப்பூசியை நாய் கடித்த 7வது நாளிலும், 4வது தவணை தடுப்பூசியை நாய் கடித்ததில் இருந்து 28வது நாளிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
ரேபீஸ் பாதிப்பை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ரேபீஸ் ஏஆர்வி தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
மேலும் 4 தவணை தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொள்ளவும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b