Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 16 ஜனவரி (ஹி.ச.)
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்த பாலியல் தொல்லை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமி, தனது குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சை நடைபெறுவதால் உடன் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, அங்கு பணிபுரிந்து வந்த நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் கோபிநாத், சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. கோபிநாத் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், வயது 35 என்பதும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னிடம் நடந்த பாலியல் தொல்லை குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், சிறுமி கூறிய தகவல்கள் மற்றும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மருத்துவ மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுமியின் வயது குறைவானது என்பதால், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு, குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதும், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்களின் நடத்தை, பாதுகாப்பு நடைமுறைகள், மருத்துவமனையில் வரும் பொதுமக்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN