Enter your Email Address to subscribe to our newsletters

ஜார்ஜியா, 16 ஜனவரி (ஹி.ச.)
16 நாடுகளின் பலப்பரீட்சையில், 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த கிரிக்கெட் திருவிழா பிப்ரவரி 7 வரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை பலப்பரீட்சை நடத்தும். லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை கைப்பற்றும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஆடும் 6 அணிகளும் 2 குழுவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் இரண்டு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
துவக்க நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில், இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொண்டது. போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, அமெரிக்க அணி முதலில் களம் இறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அமெரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அமெரிக்க அணியில் நிதிஸ் சுதிநி மட்டும் நிதானமாக விளையாடி 36 ரன்கள் குவித்தார். முடிவில், அமெரிக்க அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ஹெனில் படேல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து, 108 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. டிஎல்எஸ் விதிப்படி இந்திய அணிக்கு 96 ரன்கள் இலக்காக குறிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / JANAKI RAM