Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச)
தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நிலையில் பண மூட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய நீதிபதி யஷ்வந்த் மறுத்துவிட்டார். இதையடுத்து, கடந்தாண்டு நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் வழங்கினர்.
இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட மக்களவை சபாநாயகர் யஸ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தார். இதே தீர்மானம் மாநிலங்களவையில்
நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா மனுத் தாக்கல் செய்தார். அதில் விசாரணைக்கு குழு அமைத்தது அரசியல் சாசனம் மற்றும் நீதிபதிகள் விசாரணை சட்டத்துக்கு எதிரானது என கூறி சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்யும்படி நீதிபதி வர்மா கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் எஸ்சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் விசாரணை தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b