உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்
மதுரை, 17 ஜனவரி (ஹி.ச.) தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அ
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்


மதுரை, 17 ஜனவரி (ஹி.ச.)

தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (15-01-26) விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இந்த போட்டியில் பங்கேற்று காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளும், சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று (16-01-26) மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை நிறைவடைந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை பிடித்து பொந்துபட்டியை சேர்ந்த அஜித் மற்றும் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய இரண்டு மாடுபிடி வீரர்கள் சம நிலையில் இருந்தனர். இருவரும் சமநிலையிலேயே இருந்ததால் குலுக்கல் முறையில் அஜித் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு முதல் பரிசான கார் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று (17-01-26) காலை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இப்போட்டியில் மதுரை ஆட்சியர் பிரவீன் தலைமையில் உறுதிமொழி கூற அதை காளையர்கள் ஏற்று காளைகளை பிடிப்பதற்காக களம் கண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் சிறந்த 1100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 600 மாடு பிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர்.

முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

2ஆம் இடம் பிடிக்கும் காளைகளுக்கு பைக்கும், காளையர்களுக்கு இ-ஸ்கூட்டரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b