Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 17 ஜனவரி (ஹி.ச)
மேற்குவங்க மாநிலம் மால்டாவில் இன்று (ஜனவரி 17) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜ ஏற்கனவே கிழக்கு இந்திய மாநிலங்களை வெறுப்பு அரசியலிலிருந்து விடுவித்துள்ளது. மேற்கு வங்க மக்களின் உண்மையான மாற்றத்திற்கான வேட்கையை நான் உணர்கிறேன். பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, மேற்குவங்கத்திற்கான நேரம் இது. மேற்கு வங்கத்தில் மாற்றம் தேவை, பாஜ அரசு ஆட்சி அமைக்க வேண்டும்.
நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், 4 புதிய அம்ரித் பாரத் ரயில்களைப் பெற்றதற்காக மேற்கு வங்க மக்களை நான் வாழ்த்துகிறேன். மேற்கு வங்கத்தின் அனைத்து வீடற்ற மக்களுக்கும் வீடுகள், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மேற்கு வங்கத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜ அரசு ஆட்சி அமைக்கப்படும்.
மேற்குவங்கம் பாஜவால் ஆளப்படும் மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான சாதனையையும் கொண்டுள்ளது. ஒடிசாவில் முதல் முறையாக பாஜ ஆட்சி அமைத்துள்ளது. திரிபுரா பல ஆண்டுகளாக பாஜவை நம்பியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான தற்போதைய அரசு பொதுமக்களை கொள்ளையடித்து வருகிறது. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. மத்திய அரசு மேற்குவங்கத்திற்கு 40 முறை வெள்ள நிவாரண நிதியை அனுப்பியது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது கிடைக்கவில்லை.
திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, பாஜ ஆட்சி அமைத்தால் மட்டுமே மேற்கு வங்கம் வளர்ச்சியடையும். மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய பிரச்னை ஊடுருவல்.பாஜ வெற்றி பெறும் என்று யாரும் நினைக்காத இடங்களில் இப்போது தேர்தல்களில் வெற்றி பெறுகிறது. நாட்டின் வாக்காளர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், பாஜ மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை இது நிரூபிக்கிறது.
பல ஆண்டுகளாக பாஜ பற்றி பொய்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்ட பகுதிகளில் கூட, வாக்காளர்கள் இப்போது எங்களுக்கு தங்கள் ஆசிகளை வழங்குகிறார்கள்.
இன்று உங்கள் உற்சாகத்தைக் கண்டு, இந்த முறை மேற்கு வங்க மாநில மக்களும் பாஜவுக்கு மகத்தான வெற்றியை உறுதி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b