சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசுப்பணி வழங்கப்படும் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை, 17 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்ட
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசுப் பணி வழங்கப்படும்  - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


மதுரை, 17 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும் நேற்று பாலமேடிலும் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு நடை பெற்று முடிந்தது.

இந்நிலையில் மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று (17-01-26) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இப்போட்டியில் சுமார் 1,000 காளைகளும், 5,00 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வருகை தந்தார்.

வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் அடக்கி விளையாடி வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து மகிழ்ந்தார்.

அதனை தொடர்ந்தும் போட்டியின் போதே எழுந்து நின்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

உலகப்புகழ் பெற்றிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்கும் போது, நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்கும் காளையர்களை பார்க்கும் போது, நமது தமிழ் மண்ணிற்கு ஒரு பெருமையாக இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டிற்கு, எருது விடும் அரங்கம் கட்டிக்கொடுத்திருக்கிறோம்.

இப்போது ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வராக வந்திருக்கும் நான், ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு சென்றால் தான் அனைவருக்கும் திருப்தியாக இருக்கும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்த வழிவகை செய்யப்படும்.

2-வது அறிவிப்பாக, தமிழகத்தின் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக, அலங்காநல்லூரில் ரூ.2 கோடி செலவில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b