Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையொட்டி இந்த ஆண்டுக்கான உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு வாடிவாசலில் கோயில்காளைகள் அவிழ்க்கபட்டன.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் சீருடையணிந்த தலா 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி வருகின்றனர். போட்டியில் 1000 காளைகள், 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அலங்காநல்லூரில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார். இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரை வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று (ஜனவரி 17) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உத்தரவு வழங்கியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b