Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வக் குமார் (22), அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். திருமணம் ஆகாத செல்வக்குமாருக்கு, பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரீனா (24) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
ரீனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இருக்கும் நிலையில், செல்வக்குமாருடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில், கணவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில், ரீனாவும் செல்வக்குமாரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நேரத்தில் ரீனாவின் தோழியான ரஜிதா (25) என்பவருடனும் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரீனாவிற்கு தெரிய வரவே, அவர் இது குறித்து செல்வக்குமாரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது செல்வக்குமார், நீங்கள் இருவரும் எனது இரண்டு கண்கள் எனக் கூறியதோடு, இருவரும் எனக்கு வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் தான், செல்வக்குமார் படுகாயங்களுடன் சாலையில் கிடந்ததைக் கண்டு, அந்த வழியாக சென்ற மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வக்குமாரை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், செல்வகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பல்லாவரம் காவல்துறையினருக்கு, ரீனா, ரஜிதா ஆகிய இருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக விசாரணை வளையத்திற்குள் இருவரும் கொண்டு வரப்பட்டனர். அப்போது, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம், காவல்துறையினரை திடுக்கிட வைத்துள்ளது.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தோழிகள் ரீனா, ரஜிதா ஆகிய இருவரும் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து செல்வக்குமாரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செல்வக்குமாரிடமும் இருவரும் பணத்திற்காகவே பழகியுள்ளனர். இது குறித்து செல்வக்குமாருக்கு சந்தேகம் எழவே, இவர்களுக்கிடையே அவ்வப்போது பிரச்சினைகள் வெடித்துள்ளன. இதன் காரணமாக செல்வக்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட தோழிகள், தங்களுடன் சிறுவன் உள்பட நான்கு நண்பர்களை சேர்த்துள்ளனர்.
தோழிகளின் சதித்திட்டத்தின்படி, புதன்கிழமை இரவு செல்வக்குமாருக்கு போன் செய்த அவர்கள், பழைய பல்லாவரம், சுபம் நகர் பகுதி பூங்காவுக்கு வருமாறு ஆசை வார்த்தை கூறி அழைத்ததாக ரீனா மற்றும் ரஜிதா காவல்துறையினரிடத்தில் தெரிவித்துள்ளனர்.
அதனை நம்பி அங்கு சென்ற செல்வக்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தோழிகள் இருவரும், தங்களது ஆண் நண்பர்கள் நான்கு பேருடன் தயாராக காத்திருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து, தாங்கள் ஏற்கனவே தயாராக மறைத்து வந்திருந்த பட்டா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் செல்வக்குமாரின் தலை, முகம் மற்றும் ஆண் உறுப்பு ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறியுள்ளனர்.
இதனிடையே, காவல்துறையினருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, யாரோ வழிப்பறி திருடர்கள் செல்வக்குமாரை தாக்கி விட்டுச் சென்றது போன்று செட்டப் செய்து, ரீனா சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையை முடித்த காவல் துறையினர், பல்லாவரத்தில் பதுங்கியிருந்த 17-வயது சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞருக்கு காதல் வலை விரித்து சிக்கும் இளைஞர்களிடம் பணம் சம்பாதித்து வந்த இரு பெண்கள் உள்பட சிறுவன் கொலை வழக்கில் கைதான சம்பவம் பல்லாவரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Hindusthan Samachar / ANANDHAN