Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றிய புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்.
அதிமுக எனும் மாபெரும்
மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய
மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.
தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவராம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்கி,
தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.
அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும்.
உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ