Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஜனவரி (ஹி.ச.)
ஈரானில் பெருகிவரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் விண்ணை முட்டும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள், அந்நாட்டு அரசாங்கத்துக்கும், உச்சபட்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கும் எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த எதிர்ப்பு அலை தீவிரமடையவே, அரசு அதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முற்பட்டது.
இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல்கள் வெடித்தன. இது ஈரான் தேசம் முழுவதும் வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, அரசு கட்டிடங்கள் சூறையாடப்பட்டன.
தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் அணிவகுத்து பேரணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசுக்கும் அயதுல்லா அலி கமேனிக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.
பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த வன்முறையில் இதுவரை 2,572 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் ஈரானில் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஈரானில் எந்நேரமும் வெடிக்கக்கூடிய பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது அரசாங்கப் படையினர் ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில்,
ஈரானில் சுமார் 9,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு நிலவும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM