Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஜனவரி (ஹி.ச.)
மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கையாக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 மற்றும் தொலைத்தொடர்பு விதிமுறைகளை மீறி, முறையற்ற வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த எட்டு நிறுவனங்களுக்கு எதிராக இறுதிக்கட்ட உத்தரவுகளை பிறப்பித்து, மொத்தம் ரூ.44 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
இதற்கு முன்னோடியாக, ஜியோமார்ட், சிமியா, டாக் ப்ரோ, மீஷோ, மாஸ்க்மேன் டாய்ஸ், டிரேட்இந்தியா, அன்ட்ரிக்ஷ் டெக்னாலஜிஸ், வர்தான்மார்ட், இந்தியாமார்ட், மெட்டா(பேஸ்புக்), பிளிப்கார்ட், கிருஷ்ணா மார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட 13 இணையவழி வணிக நிறுவனங்களுக்கு சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.
இந்த நடவடிக்கையானது, இந்த வலைத்தளங்களில் 16,970-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத பொருட்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக எடுக்கப்பட்டது.
நுகர்வோர் உரிமைகளை மீறிய குற்றத்திற்காக, மீஷோ, மெட்டா, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிமியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ மற்றும் மாஸ்க்மேன் டாய்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே அவர்கள் தெரிவித்தார்.
இதில், மீஷோ, மெட்டா, சிமியா, ஜியோமார்ட் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே அபராத தொகையை செலுத்திவிட்டதாகவும், மற்ற நிறுவனங்கள் இன்னும் செலுத்தவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த வருடம் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், இணையவழி வணிகத் தளங்களில் வாக்கி-டாக்கி போன்ற ரேடியோ கருவிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்கும், முறைப்படுத்துவதற்குமான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM