Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்திற்குள், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து மாணவர் விடுதியைக் கட்டி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கட்டணம் என்ற பெயரில் வசூலித்து லாபமடைந்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தியது.
கீழமை நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவிட்டது. அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். நேற்று உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்துவிட்டது.
வேறு இடமே இல்லாமல் தனது குடும்பம் வாழ 3 சென்ட் இடத்தில் குடிசை அமைத்தால், ஆகப்பெரிய குற்றம் என்று கூறி உடனே அப்புறப்படுத்த உத்தரவிடும் நீதிமன்றங்கள், பல நூறு ஏக்கரில் பல்கலைக்கழகம் நடத்துபவர் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க கூடாது என்று தடை விதித்துள்ளது.
ஏழைக்கொரு நீதி, வசதி படைத்த கல்வி வியாபாரிகளுக்கு வேறொரு நீதியா? தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ