Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ. 518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.
அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ. 3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ