Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கி சாதனை, 97% குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்துள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/- வழங்கப்படும்” எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 8.1.2026 சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். மேலும், துணை முதலமைச்சர் அவர்கள் சென்னை, சிந்தாதரிப்பேட்டை TUCS நியாயவிலைகடையிலும், அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.
இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்றது. இந்த தைத்திருநாளை ஒரு திருநாளாக மட்டுமல்ல,ஒரு திருப்புமுனையாக மாற்றியிருக்கிறது தமிழக அரசு.
ஜனவரி 4 - முதல்வரின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு. அதன் தொடர்ச்சியாக, ஜனவரி 5 - அரசாணை வார்த்தை அல்ல செயல் அதுவே வாழ்வில் வந்த நம்பிக்கையாக செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு கைகளில் பரிசாக ரொக்கமாக ரூ.3,000 வீதம் ரொக்கம் ரூ.6687.51 கோடி , ஒரு கிலோ அரிசியாக ஒரு கிலோ சர்க்கரையாக ஒரு முழு நீளக் கரும்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.248.66 கோடி மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.668.12 கோடி செலவில் வேட்டி சேலை மொத்தம் ரூ.7604.29 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எண்கள் பெரிது ஆனால் மக்கள் மகிழ்ச்சி அதைவிட பெரிது!
விவசாயிகளிடமிருந்து தரம் பார்த்து கொள்முதல் செய்வதில் இத்துறை பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிந்தார்கள்.உழைப்பின் பலன் உழைப்பாளருக்கே!
இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்கிட கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிற தேசிய வங்கிகள் செய்ய முடியாததை, கூட்டுறவு வங்கி திறம்பட செய்து சாதித்துள்ளது. இந்தியாவில் எந்த வங்கியும் செய்ய முடியாததை தமிழக கூட்டுறவுத் துறை செய்து முடித்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தொடங்குகிறது ஒரு பொறுப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வழியாக அந்த பொறுப்பு ஒழுங்காக வழி நடத்தப்படுகிறது-தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் அது பாதுகாக்கப்படுகிறது…அங்கிருந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பயணம் வேகம் எடுக்கிறது-தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அந்த ஓட்டம் அலுவலகத்திலிருந்து மக்களை நோக்கி இறுதியில் கூட்டுறவு பணியாளர்கள், விற்பனையாளர்களின் கைகளில் ஓட்டம் நிறைவு பெறுகிறது.
ரொக்கமாக…நேரடியாக…ஒரு நொடியும் தாமதமின்றி…பொதுமக்களின் கைகளில். இது சாதாரண விநியோகம் இல்லை கூட்டுறவுத் துறை அதிகாரிகளின் திட்டமிடுதல்… ஊழியர்களின் இரவு பகல் உழைப்பு…மொத்த கூட்டுறவு துறையின் அர்ப்பணிப்பு…இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை சவால்கள் இருந்தன…காலம் குறைந்தது ஆனால் மக்கள் மகிழ்ச்சியே
முதல்வரின் மன மகிழ்ச்சி!
இத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உரிய பணிகளை இரவு பகலாக சிரமேற்கொண்டு, தங்கு தடைகளின்றி, மக்களின் நன்மை கருதியும், அவர்களது மன மகிழ் சார்ந்து, பொங்கல் தொகுப்பு 2026 அறிவிக்கப்பட்ட ஜனவரி 4 அன்று முதல் பொங்கல் தொகுப்பு துவுக்கப்பட்ட ஜனவரி 8ம் நாளன்றுக்குள் மிக மிக குறுகிய நாட்களுக்குள் பணிகளை செவ்வனவே முடித்தது, மகிழ்ச்சியும் பாராட்டுதலுக்குரியது.
மேலும், இந்தியாவிலேயே 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக குறுகிய நாட்களுக்குள் பொங்கல் தொகுப்பினை 97% வழங்கியது தமிழக முதல்வர் அவர்களின் அரசு தான். இப்பெருமைக்கும் சாதனைக்கும் அயராது பணிகளை மேற்கொண்ட இத்துறையின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் மகிழ்வதோடு, அவர்களுக்கு மீண்டும் எனது பாராட்டுதலைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் அவர்கள் ஏழை-எளியோர் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறிப்பாக, கூட்டுறவுத் துறையின் வாயிலாக அடிதட்டு ஏழை எளிய மக்களுக்கு விவசாயம் சார்ந்தவைகளுக்கு உறுதுணையாக செயல்படும் விதமாக, ஆக்கமும் ஊக்கமும் அளித்து இத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆவார். இத்துறையின் சேவைகள், திட்டங்கள் மென்மேலும் தொடர்ந்து வளர்ச்சி நோக்கி பயணிக்கும்
இவ்வாறு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b