Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 17 ஜனவரி (ஹி.ச.)
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி யாரும் எதிர்பாராத வகையில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு ஜூன் மாதம் 4ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்பொழுது மைதானத்தின் வெளியே கட்டுக்கடங்காத ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் விளைவாக பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் மற்ற அதிகாரிகள் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக அமைச்சரவை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தும் நோக்கில் மைதானத்தில் சுமார் 300 முதல் 350 அதிநவீன ஏஐ கேமராக்களை பொருத்தும்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது.
இதற்கான மொத்த செலவான 4.5 கோடி ரூபாயை தாங்களே முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
ஏஐ கேமராக்கள் மூலம் ரசிகர்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்பதால் ஆர்சிபி இந்த புது முயற்சியை எடுத்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM