Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச)
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் இன்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கொடிய வறுமையும், நெடிய சவால்களும் வாழ்வை சூழ்ந்தபோதும் கொண்ட இலட்சியத்தைக் கைவிடாமல் சரித்திர நாயகராகப் புகழ்பெற்றவர். மக்கள் கலைஞராக இருந்து மக்களின் தலைவராக எழுச்சி கண்டவர். சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர்.
பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசின் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியவர். பரம்பரை பரம்பரையாக ஒருசிலரிடம் இருந்த கிராம உள்ளூர் நிர்வாகத்தை மாற்றி, 'கிராம நிர்வாக அலுவலர்' (VAO) என்ற அரசு அலுவலர்களை உருவாக்கி சமூகநீதியை நிலைநாட்டியவர்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b