திருவள்ளூர் அருகே செங்கல் சூளையிலிருந்து 24 கொத்தடிமைகள் அதிரடியாக மீட்பு
திருவள்ளூர், 17 ஜனவரி (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கண்ணூர் கிராமத்தில் KDM என்ற தனியார் செங்கல் சூளை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒரு குழந்தை
கொத்தடிமைகள்


திருவள்ளூர், 17 ஜனவரி (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கண்ணூர் கிராமத்தில் KDM என்ற தனியார் செங்கல் சூளை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒரு குழந்தை உட்பட 24 பேரை அழைத்து வந்து பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

அவர்களை அழைத்து வருவதற்கு முன்னதாக செய்யும் பணிக்கு ஏற்ப கூலி வழங்க உறுதியளித்ததுடன் தங்குவதற்கு இடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அவர்களை அழைத்து வந்த பிறகு 2000 ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு சுமார் ஒரு மாத காலமாக காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செங்கல் வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக சத்தீஸ்கர் மாநிலத்தை சார்ந்தவர்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்ததுள்ளனர்.

இந்நிலையில் அந்த மாநிலத்தின் அமைச்சர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்ணூர் பகுதியில் உள்ள KDM என்ற செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 24 நபர்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவின் பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் மீட்டு பேரம்பாக்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் அவர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவியான 35 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதற்காக வங்கிக் கணக்கு மற்றும் அவர்களின் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் வங்கி கணக்கிற்கு 35 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுவதுடன் அவர்கள் சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு அரசு செலவில் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்

மேலும் இதுபோன்று திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து செங்கல் சூளைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் கொத்தடிமைகள் கண்டறியப்பட்டால் அந்த செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருவள்ளூர் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam