Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 17 ஜனவரி (ஹி.ச.)
வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள சிஎம்சி மருத்துவர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவர் பிளிங்கின் என்பவர் தங்கியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎம்சி அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றி வரும் மருத்துவர் பிளிங்கின் கேரள மாதிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இவரது குடியிருப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் குழுவினர் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்த முயன்றனர்.
அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவர் வருவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், அவர் குடியிருப்புக்கு திரும்பாமல் திடீரென தலைமறைவானார்.
இதையடுத்து, அருகில் வசிக்கும் மருத்துவர்கள் உதவியுடன் பிளிங்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நடந்த சோதனையில் 10 கிராம் மெத்தப்பட்டமைன், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை தோட்டப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அமலாக்கப்பிரிவு போலீஸார் சென்றனர்.
அங்கு புகாரைப் பெற மறுத்த போலீஸார், தங்களுக்கு தொடர்பில்லாத சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் குறித்து வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் பிரிவில் (என்.ஐ.பி) ஒப்படைக்கும்படியும் கூறி அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து அமலாக்கதுறையினர், காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.
ஆனால், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், சுமார் 100 கிராமிற்கு குறைவாக கஞ்சா இருப்பதால் எங்களால் வழக்கு பதிவு செய்ய முடியாது ஒரு கிலோவுக்கு மேல் இருந்தால் தான் எங்களால் வழக்கு பதிவு செய்ய முடியும் என கூறியதாக கூறப்படுகிறது.
எனவே, நீங்கள் மீண்டும் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று கூறினர். அதனால் அங்கிருந்து வந்த அமலாக்கத்துறையினர், மீண்டும் வடக்கு காவல்துறையினிடத்தில் புகார் அளித்தனர்.
அதனால் வடக்கு காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு துறையினர் மருத்துவர்கள் தங்கி இருக்கும் தங்கும் விடுதிக்கு வந்து அமலாக்கத் துறையினருடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b