Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 17 ஜனவரி (ஹி.ச)
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று (ஜனவரி 17) காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களது உறவினர்களுடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், கிளியூர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிஸ் சீட் காட்சி முனை, ஜென்ஸ் சீட் காட்சி முனை, சேர்வராயன் மலை, மஞ்சகுட்டை காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் பாதுகாப்பு பணிகள் கூடுதலாக காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோன்று கிளியூர் நீர்வீழ்ச்சியில் நீராடும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் நீராட அறிவுறுத்தி வருகின்றனர். அண்ணா பூங்கா மற்றும் மான் பூங்காவில் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் தங்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், உள்ளூர் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் ஹோம் ஸ்டேக்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி வழிவதால் ஏற்காடு நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b