Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 15 ஆம் தேதியும் அதனை தொடர்ந்து மாட்டுப்பொங்கல் பண்டிகை ஜனவரி 16 ஆம் தேதியும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்று காணும்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன.
இவற்றில் போகிப் பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதியன்று மட்டும் ரூ. 217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 15ஆம் தேதியன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ரூ.98.75 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
திருச்சி மண்டலத்தில் ரூ.85.13 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.95.87 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.76.02 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.79.59 கோடிக்கும் விற்பனையாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மனமகிழ் மன்றங்களில் கடந்த 14ஆம் தேதி ரூ.33.16 கோடிக்கும், நேற்று ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் நடப்பு ஆண்டு 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b