ரூ.6.36 கோடி செலவில் காற்றின் தரத்தை கண்காணிக்க டிஜிட்டல் பலகைகள் - சென்னை மாநகரராட்சி ஏற்பாடு
சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.) சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 100 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகைகளைமாநகராட்சி அமைக்க உள்ளது. இதில், சோதனை அடிப்படையில்
ரூ.6.36 கோடி செலவில் காற்றின் தரத்தை கண்காணிக்க டிஜிட்டல் பலகைகள் - சென்னை மாநகரராட்சி ஏற்பாடு


சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 100 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகைகளைமாநகராட்சி அமைக்க உள்ளது.

இதில், சோதனை அடிப்படையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட நுழைவு வாயில் அருகே டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்குள் 100 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறியும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தவும் மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது,

சென்னையில் மணலி, தியாகராய நகர், கோயம்பேடு, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதிகள் அதிக மாசுபாடு உள்ள பகுதிகளாக உள்ளது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக நாள்தோறும் காற்றின் தரம் மாறுபடுகிறது.

இதை அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில், சென்னையில் முதற்கட்டமாக 75 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறிந்துகொள்ளும் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட இருக்கிறது. சோதனை அடிப்படையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வெளியே பொருத்தப்பட்டிருக்கிறது.

இதன் திட்ட மதிப்பு ரூ.6.36 கோடி ஆகும். போக்குவரத்து சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவை அமைக்கப்படும். இந்த டிஜிட்டல் பலகைகளில் நாள் தோறும் காற்றில் உள்ள தூசுகள்,நாசகார வாயுக்களின் விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தரவுகள் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும். பிப்ரவரி மாத இறுதிக்குள் டிஜிட்டல் பலகைகள் முழுமையாக அமைக்கப்பட்டுவிடும். சுற்றுச்சூழலை மாசில்லாமல் பாதுகாப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த டிஜிட்டல் பலகைகள் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b