Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் விடுமுறை கடந்த
14-ம் தேதி தொடங்கி இன்று (ஜனவரி 18) வரை இருந்ததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர் கள் நாளை (ஜனவரி 19) மீண்டும் அலுவலகம், பள்ளிக்குச் செல்ல ஏதுவாக இன்று மதியத்துக்கு பின் ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
சனி, ஞாயிறு விடுமுறை இல்லாத தனியார் நிறுவன பணியாளர்கள் சிலர் நேற்று காணும் பொங்கல் முடிந்ததும் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குத் திரும்பினர். நேற்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,415 பேருந்துகளும், சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு 2,060 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இன்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 3,100 பேருந்துகள் என மொத்தம் 5,192 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளையும் இயக்கப்படும் அதேபோல சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு 4,080 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் கூடுதலாக திங்கள்கிழமையும் விடுமுறை எடுத்து அன்றைய தினம் ஊர் திரும்பவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் நாளை சென்னைக்கு கூடுதலாக 1,500 பேருந்துகளும், மற்ற நகரங்களுக்கு 2,400 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b