Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 ஜனவரி (ஹி.ச.)
கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 1 C அரசு பேருந்தில் TN 37 3843 என்ற எண் கொண்ட பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த பேருந்து ஆர்.எஸ்.புரம் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அந்த நபருக்கு திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்து பேருந்திற்குள் விழுந்து உள்ளார். இந்த நிலையில், பேருந்தை இயக்கிய ஓட்டுநரும், நடத்துனரும், மயக்கம் அடைந்த அந்த நபருக்கு உரிய முதலுதவி அளிக்காமலும், உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைத்து தகவல் கொடுக்காமல், அவரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரமாக படுக்க வைத்து விட்டு பேருந்தை அங்கு இருந்து தொடர்ந்து இயக்கிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
பின்னர், அருகில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை கவனித்து, உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம், மயக்க நிலையில் இருந்த அந்த நபர் கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அந்த நபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசு பேருந்து பணியாளர்களின் இந்த மனிதாபிமானமற்ற அலட்சியமான செயல்பாடு பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மனிதநேயமற்ற இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN