Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
எலமனூரில் தமிழில் எச்சரிக்கை செய்தி ஒலிபரப்பு இல்லாத காரணத்தினால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்ததாக மதிமுக எம்பி துரை வைகோ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
எனது திருச்சி தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண் 69 இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள எலமனூரில் தமிழில் எச்சரிக்கை செய்தி ஒலிபரப்பு இல்லாத காரணத்தினால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதியும், அலைபேசி வாயிலாக அழைத்து இதன் விபரங்களையும் அவசரத்தையும் எடுத்துக் கூறி, விரைந்து அதனை சரி செய்ய கேட்டுக்கொண்டேன்.
தமிழில் எச்சரிக்கை இல்லாததாலும், வேற்று மொழியில் அவை ஒலிபரப்பப்படுவதாலும் நேரும் ஆபத்தை உணர்ந்துகொண்ட கோட்ட மேலாளர் அதனை உடனே சரிசெய்வதாக உறுதியளித்தார் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ