Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 18 ஜனவரி (ஹி.ச)
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று (ஜனவரி 18) திருவனந்தபுரத்தில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
2006, 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
.இந்நிலையில், தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.ராஜாவை தோல்வி பெற செய்யும் முயற்சியை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 2022-ம் ஆண்டில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓராண்டு காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களிடையே பரிச்சயமான அரசியல் பிரமுகராக அறியப்படும் ராஜேந்திரன், தற்போது பாஜக-வில் இணைந்துள்ளார். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய அரசியல் மாற்றம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவடேகரை ராஜேந்திரன் சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் பாஜக-வில் இணைந்துள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் மூணாறு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் பாஜக-வில் இணைய உள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
அடுத்த 90 நாட்களில் கேரளாவின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை ஆகிய மூன்று விஷயங்களை முன்வைத்து பாஜக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b