Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 ஜனவரி (ஹி.ச.)
உலகெங்கும் பல தேசங்களில் பொருளாதாரச் சரிவு தலைவிரித்தாடும் இக்கட்டான தருணத்தில், தங்கத்தின் முதலீடுகள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக, பாரத தேசத்தில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும், நகைப்பிரியர்களின் மனங்களில் தங்கத்தின் மீதான ஆசை சற்றும் குறையவில்லை.
தங்க நகைகளைத் தொடர்ந்து, வைர நகைகள் மீதும் நம் நாட்டு மக்களுக்கு அளவற்ற ஈர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், சந்தையில் செயற்கை வைரங்கள் மலிந்து கிடக்கின்றன.
இதனால் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, செயற்கை வைரங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டும் விதமாக, இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி இந்தியாவில் இயற்கையான வைரத்தை மட்டுமே வைரம் என்று அழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தங்கத்திற்கு 916 என்ற ஹால்மார்க் எண் முத்திரை இருப்பது போல, வைரத்திற்கு 'ஐ.எஸ்., 19469:2025' என்ற புதிய எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தரநிலை நுகர்வோரின் நலனை காக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வணிகத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலைகளை தவிர்க்கவும், தெளிவில்லாத விளக்கங்களை சரி செய்யவும் இந்த தரநிலை வழி வகுக்கும்.
புதிய விதிமுறைகளின்படி, வைரம் என்ற பெயரை இனி இயற்கை வைரங்களுக்கு மட்டுமே சூட்ட வேண்டும். அதோடு, இயற்கையான, அசலான, உண்மையான, விலை உயர்ந்த போன்ற அடைமொழிகளையும் இயற்கை வைரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், தோண்டி எடுக்கப்பட்ட வைரம் போன்ற சொற்களை இனி பயன்படுத்தக் கூடாது.
ஆனால், செயற்கை வைரங்களை பற்றி குறிப்பிடும்போது, பரிசோதனை கூடத்தில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் என்பதை நுகர்வோர் தெளிவாக உணர்ந்து கொள்ளும் வண்ணம், அவற்றை 'பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரம்' என தெளிவாக அழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM