Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 18 ஜனவரி (ஹி.ச.)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்டி மலையில் 64 ஆம் ஆண்டாக ஊர் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு விழா போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் டோக்கன் பெற்றிருந்தனர்.
உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் துவங்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 627 காளைகள் களமிறக்கப்பட்டன. காளைகளை அடக்க 476 வீரர்கள் களம் இறங்கினர்.
இதில் நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கம் முயன்றும், அவர்களின் பிடியிலிருந்து லாவகமாக சென்ற காளைகளையும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 17 மாடுபிடி வீரர்கள், 16 மாடு உரிமையாளர்கள், 29 பார்வையாளர்கள் என 58 பேர் காயமடைந்தனர்.
இதில் 16 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிறப்பாக களம் கண்டு 19 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த கார்த்திக் தொடர்ந்து 3வது முறையாக முதல் பரிசினை வென்றார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவருக்கு முதல் பரிசாக காரினை வழங்கினார்.
அதே போல் சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காரினை வழங்கினார்.
Hindusthan Samachar / ANANDHAN