Enter your Email Address to subscribe to our newsletters

பிரயாக்ராஜ், 18 ஜனவரி (ஹி.ச.)
உத்தர பிரதேச மண்ணின் பிரயாக்ராஜ் திருத்தலத்தில் வருடா வருடம் மகாமேளா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த மகாமேளா வைபவத்தின்போது, அங்கு ஓடும் புண்ணிய நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் திரளான பக்தர்கள் புனித நீராடி தங்கள் பாவங்களை கழுவுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
இதன்படி, கடந்த 3-ம் தேதி பிரயாக்ராஜில் பெளர்ணமி திருநாளில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் இனிதே ஆரம்பமானது. இந்த மகாமேளா பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வரை மொத்தம் 44 நாள்கள் நடைபெற உள்ளது.
முதல் நாளிலேயே புண்ணியத்தில் நனைய லட்சக்கணக்கான விசுவாசிகள் அங்கு குவிந்தனர். அதே போல, கங்கை நதியிலும் முங்கி எழுந்து தங்களை புனிதம் ஆக்கினர்.
குறிப்பாக, ஜனவரி 15 (மகர சங்கராந்தி), ஜனவரி 18 (மவுனி அமாவாசை), ஜனவரி 23 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 1 (மகி பூர்ணிமா) மற்றும் பிப்ரவரி 15 (மகா சிவராத்திரி) ஆகிய தினங்கள் புனித நீராடுவதற்கு உகந்த முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது.
அதன்படி, முந்தைய 15-ம் தேதி மகர சங்கராந்தி புண்ணிய தினத்தில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டம் புனித நீராடினர். இந்நிலையில், மவுனி அமாவாசையை ஒட்டி பிரயாக்ராஜின் சங்கமத்தில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, வாட்டும் குளிரிலும் புனித நீராடி மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புனித நீராட வரும் பக்தர்களின் சௌகரியத்திற்காக உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் சுமார் 12,100 அடி நீளத்திற்கு குளியல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருந்திரளான மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், வாகனப் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீராக நடைபெறவும் இந்த வருடம் மொத்தம் 42 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM