பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திசைமாறிச் சென்றாலும் அசாதாரணமான முறையில் உயிர் பிழைத்த ஸ்பெயினின் சிறிய செயற்கைக்கோள்!
சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.) இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டை வானில் செலுத்தியது. கம்பீரமான 44.4 மீட்டர் உயரத்தில், நான்கு நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், 2026 ஆம் ஆண்டின் முதல் விண்வெளிப் பயணமாக அமைந்தது. இந்த ராக்க
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திசைமாறிச் சென்றாலும் அசாதாரணமான முறையில் உயிர் பிழைத்த ஸ்பெயினின் சிறிய செயற்கைக்கோள்!


சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டை வானில் செலுத்தியது. கம்பீரமான 44.4 மீட்டர் உயரத்தில், நான்கு நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், 2026 ஆம் ஆண்டின் முதல் விண்வெளிப் பயணமாக அமைந்தது.

இந்த ராக்கெட், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) அதிநவீன இஓஎஸ் - என்1 செயற்கைக்கோள், மொரீசியஸ், நேபாளம், ஸ்பெயின் போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 16 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டபோது, எதிர்பாராத விதமாக பிஎஸ்எல்வி சி - 62 ராக்கெட்டின் மூன்றாவது கட்டத்தில் பாதை மாறியது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளையும், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறுகையில், தரவுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

ராக்கெட்டில் அனுப்பப்பட்ட 16 செயற்கைக்கோள்களின் கதி என்னவென்று தெரியாததால், அவை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

ஆனால், யாரும் யூகிக்க முடியாத வண்ணம், ஸ்பெயினைச் சேர்ந்த 25 கிலோ எடை கொண்ட ஒரு குட்டி செயற்கைக்கோள் மட்டும் திடீரென தகவல்களை அனுப்பியது. இந்தத் தகவலை, செயற்கைக்கோளை ஏவிய ஆர்பிட்டல் பாராடிம் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம், 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' அல்லது 'கிட்' என்ற செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் அனுப்பியது. ராக்கெட்டில் சென்ற மற்ற அனைத்தும் செயலிழந்த நிலையில், 'கிட்' மட்டும் விண்வெளியின் கடினமான சூழலைத் தாங்கி, பூமிக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியுள்ளது என்று அந்நிறுவனம் பெருமிதத்துடன் கூறியுள்ளது.

ராக்கெட் மூன்றாவது நிலையில் திசைமாறிச் சென்றாலும், நான்காவது நிலையில் 'கிட்' மட்டும் தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கியது என்று ஆர்பிட்டல் பாராடிம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக விழும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த இந்த 'கிட்' செயற்கைக்கோள், விண்வெளியில் ஏற்பட்ட கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பத்தையும் தாக்குப் பிடித்து செயல்பட்டது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM