Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகம் கரூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழப்பு சம்பவம் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி, கடந்த 12ம் தேதி டெல்லியில் விசாரணை நடத்தியது.
இவ்விசாரணையில் பங்கேற்க, அன்றைய தினம் சென்னையில் இருந்து தனி விமானத்தில் நடிகர் விஜய் புறப்பட்டு சென்றார்.
அங்கு சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேர விசாரணையில் பங்கேற்று, அதற்கான பதில்களை எழுத்துபூர்வமாக அளித்துள்ளார்.
மறுநாளும் சிபிஐ விசாரணை தொடர வேண்டிய நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு அடுத்தகட்ட விசாரணை நடத்தும்படி தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையை சிபிஐ ஏற்றுக்கொண்டு, நாங்கள் மீண்டும் சம்மன் அனுப்பும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யிடம் கூறி அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை
நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகும்படி தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
..அதன்படி, டெல்லியில் நடைபெறும் சிபிஐ விசாரணையில் ஆஜராக நடிகர் விஜய் நாளை தனி விமானத்தில் செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
எனினும், டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், அங்கு தனி விமானம் தரையிறங்குவதற்கு தாமதமானால், சிபிஐ விசாரணைக்கு செல்ல தாமதமாகிவிடும் என்பதால், சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் தனி விமானத்தில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் டெல்லிக்குப் புறப்பட்டார்.
அந்த விமானம் இரவு 7 மணியளவில் டெல்லியை சென்றடைகிறது என்று தகவல் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b