Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச)
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார்.
இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது.
அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலையில், கேமரா மெதுவாக சுழன்று பின்னே நாற்காலியில் அமர்ந்த நிலையில் பிரியங்கா மோகன் அறிமுகமாக, இறுதியாக போஸ்டரில் காணப்பட்ட அதே லுக்கில் கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணியுடன் வீடியோ நிறைவடைகிறது.
இந்த அசத்தலான அறிவிப்பு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.
இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேண்டஸி – ரொமான்டிக் – காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.
இப்படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கவின் – பிரியங்கா மோகன் ஜோடி முதன்முறையாக இணைந்திருப்பதே ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாண்டி மாஸ்டரும் இணைந்திருப்பது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கலகலப்பான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும்
Hindusthan Samachar / Durai.J