Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 18 ஜனவரி (ஹி.ச.)
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோயில் குடமுழுக்கு விழாவிற்குப் பிறகு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜீவா திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார்.
நித்திஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ (Thalaivar Thambi Thalaimaiyil) திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜன.17) பாலமேடு ஜல்லிக்கட்டை காண மதுரை வந்த ஜீவா, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அவரது படத்தை தூத்துக்குடியில் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்று (ஜன.18) திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வெளியே வந்த ஜீவாவுடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா,
பொங்கலுக்கு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நானும், அப்படத்தின் இயக்குநர் நித்திஷ் சகாதேவும் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளோம். எந்த படம் ஆரம்பிக்கும் போதும் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வதும், படம் வெற்றி பெற்றால் மீண்டும் தரிசனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன்.
அதுமட்டுமின்றி, சிறுவயது முதலே திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறேன்என்றார்.
மேலும் பேசிய அவர், “ஜல்லிக்கட்டு குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஜல்லிக்கட்டை டிவியிலும், சினிமாவிலும் பார்த்து வந்தேன். ஆனால், இந்த ஆண்டு நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்முறையாக நேரில் பார்த்தேன்.
முருகனை பற்றி நிச்சயம் ஒரு படம் எடுக்க வேண்டும். அதில் நான் நடிக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாக இன்று திருச்செந்தூர் முருகனை நேரில் வந்து தரிசனம் செய்துள்ளோம்.
நிச்சயம் அதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும். முருகனுக்கு நிறைய வரலாறு, பெருமை, மகிமை உள்ளது. அதற்காக நீண்ட ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகளும் தொடங்கும் என்றும் ஜீவா தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN