Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 18 ஜனவரி (ஹி.ச.)
அமெரிக்காவில் மறுமலர்ச்சியை உருவாக்க தன்னையே அர்ப்பணித்து வரும் அதிபர் டிரம்ப், அதற்காக மற்ற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இதன் மூலம் அமெரிக்க கருவூலம் டாலர் மழையில் நனையும் என்று கணக்கு போடுகிறார்.
முன்னதாக, உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வளத்தை கொண்டுள்ள வெனிசுலாவின் அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார்.
உலக நாடுகளையே உறைய வைத்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கொலம்பியாவை தன்வசப்படுத்த முயற்சிப்பார் என முதலில் செய்திகள் பரவின.
ஆனால், கிரீன்லாந்து தனக்கே சொந்தம் என்று டிரம்ப் பிடிவாதமாக கூறி வருகிறார். இதற்கு மற்ற நாடுகள் முட்டுக்கட்டை போடுகின்றன.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்க்டிக் பெருங்கடலில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ள ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்ற கிரீன்லாந்து எங்களுக்கு மிகவும் அவசியம் என்று திட்டவட்டமாக கூறினார்.
எனவே, அந்த தன்னாட்சி பிரதேசத்தை எங்களிடம் விற்று விடுமாறு டென்மார்க்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்கள் படைகளை அனுப்பி வருகின்றன.
ஆயினும், தமது நாட்டின் பாதுகாப்பு கருதி கிரீன்லாந்து தங்களுக்கு தேவை என்று அடித்துக்கூறும் டிரம்ப், அதற்காக அமெரிக்க ராணுவம் போர் தொடுக்கவும் தயங்காது என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் வெனிசுலா மற்றும் ஈரானில் நடந்த தாக்குதலை இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதித்து அவர்களின் பொருளாதாரத்தை நான் குலைப்பேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM