கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கைது செய்யப்பட்டது ஏன்? உற்பத்தி நிறுத்தப் போராட்டம் குற்றமா? - த.வா.க வேல்முருகன்
சென்னை, 18 ஜனவரி (ஹி.ச) தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைத்து, நியாயமானக் கறிக்கோழி உற்பத்தி கூலி உயர்வுக்கானக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு அரசு தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய முக்கியமான கட்டத்தில்
Velmurugan


Tw


சென்னை, 18 ஜனவரி (ஹி.ச)

தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைத்து,

நியாயமானக் கறிக்கோழி உற்பத்தி கூலி உயர்வுக்கானக் கோரிக்கையை முன்வைத்து,

தமிழ்நாடு அரசு தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய முக்கியமான கட்டத்தில்,

வருகின்ற 21.01.2026 அன்று அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான

சூழ்நிலை உருவாக்கப்பட்டு வந்த நிலையில், அந்த அமைதியான ஜனநாயக முயற்சியை சிதைக்கும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி,

கூட்டுறவு சங்க அணிச் செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட

9 பேரைப் பொய் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளதைத்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கறிக்கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல ஆண்டுகளாக விவசாயிகளை அச்சுறுத்தும் நோக்கில், செக், பாண்டு பேப்பர் ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தி எழுதிப் பெற்றுக்கொண்டு,

“குஞ்சுகளை இறக்கவில்லை என்றால் சட்ட சிக்கல்கள், நஷ்டங்கள் சந்திக்க நேரிடும்” என மிரட்டல் விடுத்து, விவசாயிகளை அடிமைப்படுத்தும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த அநீதிக்கு எதிராக,

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும், கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், ஒற்றுமையுடன் ஒன்று திரண்டு, “முத்தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை

குஞ்சுகளை இறக்க வேண்டாம்” என்று அமைதியான முறையில் எடுத்த முடிவை, குற்றமாக மாற்ற முயற்சிப்பது, முழுமையான சதி என்பதில் ஐயமில்லை.

கடந்த இரண்டு மாதங்களாகக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத்

திசை திருப்பும் நோக்கில்,

“குஞ்சுகள் இறந்தன, பொது சொத்து சேதம்” போன்ற

அடிப்படையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளைக்

கட்டவிழ்த்து விடப்பட்டு,கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது

மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில்,

13.01.2026 அன்று இரவு சுமார் 10 மணியளவில், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையம் சார்பில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, இரவோடு இரவாக

வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும்,

விடிய விடிய குடும்பத்தாருக்கும், நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், பல்வேறு காவல் நிலையங்களில் தேட வைக்கப்பட்ட பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும்

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும்.

போராட்டத்தைக் கலைக்கவும்,

விவசாயிகளின் ஒற்றுமையை உடைக்கவும், அரசு பேச்சுவார்த்தையைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட

இந்தக் கைது நடவடிக்கை,

விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட நேரடி அடக்குமுறை என்பதில்

எள்ளளவும் சந்தேகமில்லை.

இதனைக் கண்டித்து,

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைமையகங்களில்,

கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என

அறிவிக்கப்பட்டுள்ளதைத்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

இவ்வேளையில்,

பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அனைவரையும்,

எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யவும்,

சட்டவிரோதக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்,

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் உற்பத்தி கூலி உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையைத்

திசை திருப்பும் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி,

முறையானப் பேச்சுவார்த்தை நடத்தவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

Hindusthan Samachar / P YUVARAJ