Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 18 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகைக்காக தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்திருந்ததால் சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் பொங்கல் தொடர் விடுமுறை இன்றுடன் முடிந்து நாளை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ளதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள், தற்போது சென்னையை நோக்கி வாகனங்களில் படையெடுத்து செல்ல தொடங்கியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் இருந்து ஒரே நேரத்தில் சாரை, சாரையாக படையெடுத்து செல்லும் வாகனங்களால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை தவிர்க்கவும், வாகனங்கள் நிற்காமல் விரைவாக செல்லவும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதலாக 3 கவுண்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால் திருச்சி - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையே வாகனங்களால் நிரம்பி வழிந்து திக்கு முக்காடி வருகிறது.
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்தபடி மட்டுமே செல்ல முடிவதால் பயண நேரம் அதிகரித்து வாகன ஓட்டிகளிடையே கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN