Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 18 ஜனவரி (ஹி.ச.)
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இன்று (ஜனவரி 18) ஞாயிறுடன் பொங்கல் விடுமுறை முடியும் நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்புகிறார்கள்.
சிலர் இன்றைய கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு நாள் முன்னதாக நேற்றைய தினமே சொந்த ஊர்களில் இருந்து கிளம்பிவிட்டனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் (ஜனவரி 17) பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்தில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.
நள்ளிரவில் திடீரெனப் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், தீ விபத்து ஏற்பட்ட உடனேயே உள்ளே இருந்த 33 பயணிகளும் வெளியேறி விட்டனர்.
இதன் காரணமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர்தப்பினர்.
தீவிபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே மானாமதுரை மற்றும் பரமக்குடியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இருப்பினும், பேருந்து அதற்குள் முழுமையாக எரிந்து நாசமானது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b