Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 18 ஜனவரி (ஹி.ச.)
தை அமாவாசையான இன்று (ஜனவரி 18) அதிகாலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோயிலில் தரிசனத்திற்காக அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆனது. பக்தர்கள் வருகை காரணமாக மாட வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது தீர்த்தவாரி. அதன்படி, ஆண்டுக்கு 3 முறை, 3 ஆறுகளில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். ரதசப்தமி நாளில் செய்யாற்றிலும், மாசி மகம் திருநாளில் பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியிலும், திருவூடல் திருவிழா முடிந்ததும் தை மாதம் 5ம்நாளன்று தென்பெண்ணை ஆற்றிலும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தை மாதம் 5ம் நாளான நாளை கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதி தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் தென்பெண்ணைக்கு புறப்படுகிறார்.
அப்போது, வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு மண்டகபடி செலுத்துவார்கள். தென்பெண்ணையாற்றில் நடைபெறும் தீர்த்தவாரியில், மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாம சுந்தரி சமேத அகத்தீஸ்வரரும் அண்ணாமலையாருடன் எழுந்தருள்வார்கள். தீர்த்தவாரி முடிந்து, நாளை மறுநாள்
(20ம் தேதி) மீண்டும் அண்ணாமலையார் கோயிலுக்கு எழுந்தருள்வார்.
Hindusthan Samachar / vidya.b