Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச)
மத்தியில் ஆளும் பாஜகவின் தேசிய தலைவராக மத்திய அமைச்சரான ஜே.பி.நட்டா உள்ளார்.
இவரது பதவிக்காலம் முடிந்த பிறகு 2024 மக்களவைத் தேர்தலுக்காக நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு, அக்கட்சியின் தற்போதைய செயல் தலைவரான நிதின் நபின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
பாஜகவின் மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் முன்னிலையில் இன்று பிற்பகல் அவர் வேட்புமனு தாககல் செய்ய உள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாலை 6.30 மணிக்குப் பிறகு, வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்தல் அதிகாரி பத்திரிகைகளுக்குத் தெரிவிப்பார்.
இந்த தேர்தலில் வாக்காளர்களாக கட்சியின் தேசிய மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். வேட்புமனு தாக்கல் செய்பவர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்பவரை வாக்காளர்களில் குறைந்தது 20 பேர் கூட்டாக முன்மொழிய வேண்டும். போட்டி இருக்கும் பட்சத்தில் நாளை (ஜனவரி 20) வாக்குப்பதிவு நடைபெறும். கட்சியின் புதிய தலைவர் நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார்.
இந்த தேர்தலில், நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதின் நபின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவரை முன்மொழியவும் அவருக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவும் கட்சியின் மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் கூடுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களின் ஆதரவுடன் நிதின் நபின் கட்சியின் 12வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b