Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)
நம் தேசத்தின் 77-வது குடியரசு திருநாள் வரும் 26-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவ உணர்வு மற்றும் பண்பாட்டு பெருமைகளை போற்றும் விதமாக டெல்லி கடமைப் பாதையில் குடியரசு தின விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
குறிப்பாக, வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவும் இதில் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
தேசத்தின் ராணுவ பலம் மற்றும் கலாச்சார பல்வகைத்தன்மையின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா அமையும்.
இதனையொட்டி, இன்று (19-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் இதர மத்திய ஆயுதப் படைகள் ஒன்றிணைந்து வந்தே மாதரம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளன.
சுதந்திரத்தின் தாரக மந்திரமான வந்தே மாதரம், தன்னிறைவு இந்தியாவின் மேன்மையை பறைசாற்றும் சுயசார்பு இந்தியா ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.
இதன் தொடக்க நிகழ்வாக, ராணுவ வீரர்கள் உட்பட இந்திய ஆயுதப் படையினர் டெல்லி கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்புக்கான பயிற்சியில் இன்று காலை ஈடுபட்டனர். கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையிலும், பல நாட்களாக இந்த பயிற்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கண்கவரும் விமான சாகசங்கள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம்பெற உள்ளன.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் கம்பீர அணிவகுப்புடன், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இவ்விழாவில் இடம்பெற உள்ளது.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM