Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)
நமது விமானப்படைக்காக, ஐரோப்பிய தேசமான பிரான்சிடம் இருந்து ஏற்கனவே 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும் கப்பற்படைக்காக, ரஃபேல் - எம் என்று சொல்லப்படும் கடல் பாதுகாப்பிற்கான 26 போர்விமானங்கள் வாங்குவதற்கான உடன்படிக்கை சென்ற வருடம் ஏப்ரல் மாதம் கையெழுத்தானது.
இவை, கப்பலிலிருந்தே விண்ணில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நமது விமானப்படைக்கு 42 படைப்பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு படைப்பிரிவில் கிட்டத்தட்ட 18 லிருந்து 20 போர் விமானங்கள் வரை இருக்கும். இப்போது இருக்கின்ற போர் விமானங்களின் மொத்த எண்ணிக்கையின்படி பார்த்தோமானால், 29 முதல் 31 படைப்பிரிவு வரை மட்டுமே இயங்கும் சூழல் உள்ளது. பழமையான மிக்-21, ஜாகுவார் போன்ற போர் விமானங்கள் சேவையில் இருந்து விரைவில் நீக்கப்பட உள்ளன. ஆகையால் குறைபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு கொள்முதல் வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில், 114 ரஃபேல் ஜெட் போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில், ஆரம்பகட்டமாக 12 முதல் 18 வரையிலான விமானங்கள் வாங்கப்படும். மீதமுள்ள விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும். இதற்காக, பிரான்ஸ் நாட்டின் 'டசால்ட் ஏவியேஷன்' இந்திய நிறுவனத்துடன் கைகோர்த்து உற்பத்தியை ஆரம்பிக்கும்.
அடுத்த கட்டமாக, டி.ஏ.சி., என்று அழைக்கப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மற்றும் பிரதமர் அவர்களின் தலைமையில் உள்ள பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவின் சம்மதம் பெறப்பட வேண்டும்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், நம்மிடம் மொத்தம் 176 ரஃபேல் போர் விமானங்கள் இருக்கும்.
Hindusthan Samachar / JANAKI RAM