கடற்கரைகளில் குப்பைகள் கொட்டிய தனிநபர் மற்றும் கடை ஊழியர்களிடம் ரூ.1,90,500 அபராதத் தொகை வசூல் - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.) சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர்,
கடற்கரைகளில் குப்பைகள் கொட்டிய தனிநபர் மற்றும் கடை ஊழியர்களிடம் ரூ.1,90,500 அபராதத் தொகை வசூல் - சென்னை மாநகராட்சி தகவல்


சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு 14ம் தேதி முதல் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 233.88 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையிலும், மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கடற்கரைகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டு அவற்றில் குப்பை போட வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

இதனை மீறி மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளில் குப்பை குப்பைத் தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் கொட்டிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி, ரூ.5,000 வரை 241 பேருக்கு ரூ.1,90,500 அபராதத் தொகை இதற்கென நியமிக்கப்பட்ட 26 கண்காணிப்புக் குழுக்களின் வாயிலாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

எனவே, கடற்கரை பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை, அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b