Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
கூகிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இனிமேல் புதிய கணக்கை உருவாக்காமலேயே உங்களது பழைய ஜிமெயில் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படி மாற்றும்போதும் உங்களது பழைய கணக்கில் இருக்கும் மின்னஞ்சல்கள், கூகிள் புகைப்படங்கள், கூகிள் டிரைவ் ஆவணங்கள், கணக்கு விவரங்கள் எதுவும் தொலைந்து போகாது. எல்லாமே அப்படியே பத்திரமாக இருக்கும்.
இந்த புதிய வசதி @gmail.com என்று முடியும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. முன்பு நாம் சின்ன வயதில் வித்தியாசமான பெயர்களில் ஜிமெயில் கணக்கை ஆரம்பித்திருப்போம். ஆனால் வேலைக்குச் செல்லும் போது அந்த ஜிமெயில் ஐடியை உபயோகப்படுத்த சங்கடமாக இருக்கலாம்.
ஆனால் இப்போது அந்தத் தொல்லை இல்லை, நீங்கள் சிறு வயதில் கேலியான பெயர்களில் உருவாக்கிய ஜிமெயில் கணக்கின் ஜிமெயில் முகவரியை சுலபமாக புதுப்பித்துக் கொள்ளலாம். உங்களுடைய கூகிள் கணக்கில் பழைய ஜிமெயில் ஐடியை மாற்றி உங்களுக்குப் பிடித்த புதிய ஜிமெயில் பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்,
இந்த மாற்றத்தால் கூகிள் டிரைவ், போட்டோஸ், யூடியூப், பிளே ஸ்டோர் போன்ற சேவைகளில் உள்ள விவரங்கள், வாங்கிய சந்தாக்கள் அல்லது அக்கவுண்ட் ஹிஸ்டரியில் எந்தவித பாதிப்பும் இருக்காது. அதே வேளையில் உங்களுடைய பழைய முகவரிக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பினால், அது தானாகவே உங்களுடைய புதிய முகவரிக்கு வந்து சேரும். அது மட்டுமல்லாமல் ஜிமெயில், யூடியூப், மேப்ஸ் என எதில் புகுபதிகை செய்யவும் பழைய அல்லது புதிய ஐடி இரண்டையுமே பயன்படுத்தலாம்.
மேலும் உங்களுடைய பழைய முகவரியை வேறு யாரும் உபயோகிக்க முடியாது. அது உங்களுடனேயே இருக்கும். அதாவது முந்தைய மெயில் ஐடி, மீட்பு மெயிலாக சேமிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு அரணாக இருக்கும்.
ஒருமுறை ஜிமெயில் பெயரை மாற்றிய பிறகு, அடுத்த மாற்றத்திற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் முந்தைய ஐடிக்கு மீண்டும் மாறும் வாய்ப்பும் உள்ளது. ஒரு கூகிள் கணக்கில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பெயரை மாற்ற இயலும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஒரே கணக்கில் பல காலத்திற்கு 4 ஜிமெயில் முகவரிகள் வரை உபயோகிக்கும் சான்ஸ் கிடைக்கும்.
ஜிமெயில் சேவையில் வந்துள்ள இந்த புதுமையான வசதி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது. கூகிள் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா பயனர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தும் என்று சொல்லியிருக்கிறது. இந்த ஜிமெயில் சேவையில் உள்ள இந்த புதிய அம்சம் உங்களுக்கு வந்துள்ளதா என்று செக் பண்ணவும், மாற்றவும் கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
1. உங்களுடைய மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் myaccount.google.com/google-account-email இந்த லிங்கில் உள்நுழையுங்கள்.
2.அடுத்து Personal info என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
3.பின்பு Email என்ற விருப்பத்தை க்ளிக் செய்து அதில் Google Account email என்பதை தெரிவு செய்யவும்.
4.அதன்பிறகு Change Google Account email என்ற ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்யவும் (இந்த ஆப்ஷன் இல்லை என்றால், உங்களுக்கு இன்னும் இந்த வசதி கிடைக்கவில்லை என்று அர்த்தம்).
5.அடுத்து உங்களுக்குப் பிடித்த புது ஜிமெயில் ஐடியை டைப் செய்து அது உள்ளதா என்று சரிபார்க்கவும்.
இறுதியாக Change email என்பதை கொடுத்து உறுதிசெய்யவும்.
இவ்வளவுதான் இனி எளிதாக புதிய ஐடிக்கு மாறலாம். முன்னரே சொன்னது போல் இந்த வசதி இன்னும் எல்லா உபயோகிப்பாளருக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
இப்போது பரிசோதனை முயற்சியாகத்தான் இந்த வசதி வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து உபயோகிப்பாளருக்கும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM