ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் - 5 ஆயிரம் பேர் பலி
தெஹ்ரான், 19 ஜனவரி (ஹி.ச.) ஈரானில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. பணவீக்கம் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், அன்றாட தேவைக்கான பொருட்களின் விலையும் பல மடங்கு எகிறியுள்ளது. அதோடு அரசியல் நிலையற்ற தன்மை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் - 5 ஆயிரம் பேர் பலி


தெஹ்ரான், 19 ஜனவரி (ஹி.ச.)

ஈரானில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. பணவீக்கம் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், அன்றாட தேவைக்கான பொருட்களின் விலையும் பல மடங்கு எகிறியுள்ளது. அதோடு அரசியல் நிலையற்ற தன்மை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல சிக்கல்கள் அந்த நாட்டை வாட்டி வதைக்கின்றன.

இதன் விளைவாக, அந்நாட்டின் உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி முதல் மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் நாட்டின் மூலை முடுக்கெங்கும் பரவி, அனைத்து மாகாணங்களையும் உலுக்கி வருகிறது.

போராட்டக்காரர்கள் கமேனி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்து தங்கள் ஆவேசத்தை வெளிக்காட்டுகின்றனர்.

அதே சமயம், கமேனி தலைமையிலான ஈரான் அரசு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அடக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்தி ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது.

கடவுளுக்கு விரோதிகள் என்று முத்திரை குத்தி, போராட்டக்காரர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, ஈரானில் நடந்து வரும் இந்த கொந்தளிப்பான போராட்டத்தில் சுமார் 5,000 பேர் பலியாகியுள்ளனர். அதில் 500 பேர் பாதுகாப்புப் படையினர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அரசு வெளியிட்ட தகவலின்படி, போராட்டத்தில் 5,000 பேர் உயிரிழந்திருந்தாலும், உண்மையில் 15,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், 30,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

போராட்டங்கள் மற்றும் அரசின் ஒடுக்குமுறைகள் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவுவதை தடுக்க, ஈரான் முழுவதும் இணையதள சேவையை அந்நாட்டு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM