Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 19 ஜனவரி (ஹி.ச.)
2019-ஆம் ஆண்டில் ஆந்திர தேசத்தை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில், மது தொடர்பான கொள்கையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன.
அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற மதுபான தயாரிப்பு நிறுவனங்களை ஓரங்கட்டி, சில குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு மட்டும் சாதகமான போக்கை கடைபிடித்து, புதியதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மது வகைகளை சந்தைப்படுத்த ஊக்குவித்ததாக பல விமர்சனங்கள் எழுந்தன.
இதன் விளைவாக, 2024-ல் சந்திரபாபு நாயுடு அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றதும், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தது. முந்தைய ஆட்சியின் மதுபான கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து துருவித் துருவி விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார்.
இந்த விசாரணையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி ரூபாய் வரை மதுபான கம்பெனிகளிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டதாகவும், இதன் மூலம் ஏறத்தாழ 3,500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை, இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மூன்று குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், இவையெல்லாம் வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கை என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து, சுமார் 20 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியது. இதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மிதுன் ரெட்டி உட்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, இந்த வழக்கின் தொடர்ச்சியாக, வரும் 22-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான விஜய் சாய் ரெட்டிக்கு அமலாக்கத்துறை சம்மன் விடுத்துள்ளது.
மேலும், இவர் இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM