Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி, சென்னை பிடாரியம்மன் கோவில் தெருவில் தண்ணீர் கேன் போடுவது போல கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் தண்ணீர் கேன் வைக்கக்கூடிய இடத்தில் ((தர்கா)) சோதனை மேற்கொண்ட போது, தண்ணீர் கேனுடன் 20 லிட்டர் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
விற்பனைக்காக வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராய கேனை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்து வந்த வனிதா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை கணவர் அப்துல்லா மூலம் வாங்கி வந்து வனிதா விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்தது.
ஏற்கனவே வனிதா மீது சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்ட வழக்கு இருக்கிறது.
சென்னையில் கள்ளச்சாராயம் எப்படி ஊடுருவியது என விசாரிக்க உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் பிரத்யேகமாக தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் வனிதாவின் கணவர் அப்துல்லாவை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
வழக்கின் விசாரணையை தீவிரமாக மேற்கொண்ட போது போலீசார் சிசிடிவி காட்சிகளை மற்றும் ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அப்போது வனிதாவும் அவரது கணவரும் கள்ளச்சாராயத்தை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கடத்தவில்லை என்பது விசாரணையில் அம்பலமானது.
இருப்பினும் சென்னை மயிலாப்பூரில் பிடிபட்ட கள்ளச்சாராயம் எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொண்டதில் பார்த்தி என்பவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக பார்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூன்று காவலர்கள் தன்னை, வனிதா மற்றும் அவரது கணவரை கள்ளச்சாராய வழக்கில் சிக்க வைப்பதற்காக ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து, அவர்கள் விற்பனை செய்து வரும் வாட்டர் கேன்களோடு வைக்கச் சொன்னதாக தெரிய வந்தது. ஏற்கனவே வனிதா சட்டவிரோத மது விற்பனை விவகாரத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சந்தேகம் வராமல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அடிப்படையில் செய்ததாக தெரிய வந்துள்ளது.
இதற்குக் காரணம் தன்னை அணுகிய மூன்று காவலர்களுக்கு வனிதா மற்றும் அவரது கணவர் மாமூல் தராததால் சிக்க வைப்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. பார்த்தி என்பவர் மூலம் ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து, விற்பனைக்கு வைத்திருந்த வாட்டர் கேன்களுடன் கள்ளச்சாராயம் இருக்கும் கேனையும் வைத்து போலீசாரிடம் சிக்க வைத்ததாக விசாரணையில் கூறியதாக தெரிகிறது.
மாமூலுக்காக பொய் வழக்கு போட வைத்த மூன்று காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் துறைரீதியிலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா பாணியில் மாமூல் தராத நபர்களை கள்ளச்சாராய விற்பனை செய்ததாக காவலர்களே சிக்க வைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam