Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
நேற்று நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்தில் ஒரு நபருக்கு ₹7,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பொங்கல், தீபாவளி என அனைத்துப் பண்டிகைக் காலங்களிலும், ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுவதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும், கண் துடைப்புக்காக திமுக அமைச்சர்கள் ஆம்னி கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை.
பண்டிகை தினத்தன்று தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்ப நினைக்கும் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை ஆம்னி பேருந்துக் கட்டணம் மூலம் பறித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றெரிச்சலே விரைவில் வீழ்த்தும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ