Enter your Email Address to subscribe to our newsletters

இந்தூர், 19 ஜனவரி (ஹி.ச.)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முந்தைய இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி வாகை சூடியதால், தொடர் 1-1 என்ற சமநிலையில் நீடித்தது.
இந்நிலையில், இந்த ஒரு நாள் தொடரின் சாம்பியனை நிர்ணயிக்கும் முக்கியமான கடைசி ஆட்டம் நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், இந்த இறுதிப் போட்டி மீது ரசிகர்களின் ஆர்வம் எகிறியது.
போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங்கை துவங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே 5 ரன்களிலும், நிக்கோலஸ் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வில் யங் 30 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் டேரில் மிட்சேல், க்ளென் பிலிப்ஸ் இருவரும் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
க்ளென் பிலிப்ஸ் 106 ரன்களும், டேரில் மிட்சேல் 137 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைக் குவித்தது.
இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங், ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பதிலடி தந்தது.
ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மா, கில் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 11 ரன்களும், கில் 23 ரன்களும் எடுத்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களிலும், கேஎல் ராகுல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விராட் கோலி நிலைத்து ஆடினார். அவருக்கு துணையாக நிதிஸ் ரெட்டியும் அதிரடியாக விளையாடினார். நிதிஸ் ரெட்டி அரைசதம் அடித்து வெளியேறினார்.
பின்னர் ஹர்ஷித் ராணா களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி, ராணா இருவரும் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ராணா அரைசதம் அடித்து 52 ரன்களில் வெளியேறினார்.
அணியின் தூணாக இருந்த கோலி 124 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம், 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
Hindusthan Samachar / JANAKI RAM