Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
மேலும் அவர் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ராமதாஸ், அன்புமணியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், பா.ம.கவுக்கு உரிமை கோரி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஏற்கெனவே பா.ம.க உட்கட்சி விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில், சிவில் தொடர்பான பிரச்சனைகளை சென்னை சிவில் நீதிமன்றத்தில் அணுகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்று (19-01-26) சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் பா.ம.க தரப்பினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில் குறிப்பாக ரிட் மனு, சிவில் வழக்கு தொடர்பான மனு என இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் வழக்கின் மனுவை பொறுத்தவரையில், பா.ம.க தங்களுக்கே சொந்தம். கூட்டணி தொடர்பாக வேறு எந்த கட்சியோடும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, அப்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
ஆகவே எந்த கட்சியோடு அன்புமணி கூட்டணி ஒப்பந்தம் செய்தாலும் அது செல்லாது. இது தொடர்பாக எந்தவிதமான பேட்டிகளோ அல்லது எந்தவிதமான அறிக்கைகளோ ராமதாஸை தவிர மற்றவர்களுக்கு அதிகாரம் என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போன்று ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
பா.ம.க கட்சியின் சின்னம், கொடி, கட்சியினுடைய பெயர் என அனைத்தும் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே சொந்தம். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுவிட்டார்.
எனவே அன்புமணியும் அவரது தாப்பினரும் வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. அதற்கு அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b